கடல் போன்று பிரமாண்டமான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை: கிராமங்களில் தீவிரமடைந்துள்ள விழிப்புணர்வு பிரச்சாரம்
தோப்பூரில் நேற்று நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பேசினார் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மணிமாறன்.தமிழகத்திற்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனை அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் மதுரையில் அமைக்க வலியுறுத்தி தொழில் முனைவோர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள், வழக் கறிஞர்கள், மாணவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்காகவே மதுரையை சேர்ந்தவர்கள் ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ தொடங்கி உள்ளனர். இவர்கள் மதுரை அருகே உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக இடம் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், நேற்று முதல் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தோப்பூர் கிராமத்தில் பொதுமக்களை நேற்று சந்தித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தினர் இந்த மருத்துவ திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் பேசியதாவது:
‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை அரசு மருத்துவமனையைப் போல் 10 மடங்கு பெரியது. ஏழை நோயாளிகளுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கிடைக்கும் தரமான உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வந்தால் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய தொழிற்சாலை வந்தால் அதற்கான சிறு உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான சிறு தொழில்கள் வளர்ச்சி்ப் பெறும். அதுபோல், எய்ம்ஸ் வந்தால், ஆட்டோ, கார் வாகன ஓட்டிகள் முதல் ஹோட் டல்கள், தொழிற்சாலைகள் வரை தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவர் மகேந்திர வர்மன்
(Madurai Gilli) கூறியதாவது:
கடந்த மத்திய அரசில் திருச்சிக்கு இந்தியாவின் புகழ் பெற்ற மேலாண்மை(மேனேஜ்மெண்ட்) கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்(ஐஐஎம்), திருவாரூருக்கு மத்திய பல்கலைக்கழகம், மதுரைக்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி), கோவைக்கு ஸ்போர்ட்ஸ் யுனிவர் சிட்டி(விளையாட்டு பல்கலைக் கழகம்) போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டது.
இதில் மதுரைக்கான ஐஐடி தவிர மற்ற நகரங்களுக்கான மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்தது. சென்னை கிண்டியில் ஏற்கெனவே ஐஐடி இருப்பதால் மற்றொரு ஐஐடி கல்வி நிறுவனத்தை தமிழகத்திற்கு கொடுக்க முடியாது என கைவிரித்து விட்டது. இதை தெரிந்திருந்தும் பரிந்துரை செய்தது, மதுரையை ஏமாற்றும் செயல். இதுபோல், இந்தியாவின் சில இடங்களில் மட்டுமே செயல்படும் நேஷனல் லா ஸ்கூல்(தேசிய சட்டப்பள்ளி) சென்னை உயர் நீதிமன்ற கிளை செயல்படும் மதுரைக்கு கொண்டு வந்தால் நலமாக இருக்கும் என முதலில் இந்த பள்ளி மதுரைக்கு வர பரிந்துரைக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் அந்த பள்ளியும் மதுரைக்கு வராமல் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு சென்றது. இதேபோல், விமானங்களை பற்றிய ஏரோனாட்டிக்கல் படிப்புகள் சம்பந்தப்பட்ட ஏவியேசன் பல்கலைக்கழகம் மதுரையில் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்து இருந்தார். ஆனால், இந்த திட்டமும் வரவில்லை. கடைசியில் தற்போது மதுரைக்கு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் தஞ்சாவூருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெறும் அறிவிப்பு திட்டங்கள் தான் மதுரையை உள்ள டக்கிய தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், எந்த அறிவிப்பும், திட்டங்களும் நடைமுறைக்கு வருவதே இல்லை.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 300 நோயாளிகளை ஒரு மருத்துவர் பார்க்கிறார். அதனால் தரமான சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைப்பது கேள்விக்குறியாகிவிட்டது. அந்த மருத்துவர்கள் சுமையை குறைக்கவும், தரமான சிகிச்சை கிடைக்கவும் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையை மதுரையில் அமைக்க வேண்டியது அவசியமானது.
இந்த நிகழ்ச்சியில் கப்பலூர் தொழிற்பேட்டை சங்கத் தலைவர் எஸ்.நித்தியானந்தமூர்த்தி, துணைத் தலைவர் ஏ.எல்.பழனியப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வடிவேல் மற்றும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மக்கள் இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
டெல்லி, சென்னையில் ‘எய்ம்ஸ்’ ஆர்ப்பாட்டம்
மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் தென் மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை மதுரையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன்(ஐஎம்ஏ) மதுரை கிளைத் தலைவர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன், பாஜக மாநில செயலாளர் டாக்டர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் சசிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், இன்ஜினீியரிங் கல்லூரி மாணவர்கள், குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் மற்றும் தென் மாவட்ட 30 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தென் மாவட்டங்களில் ‘எய்ம்ஸ்’ கையெழுத்து இயக்கம் நடத்தி அவற்றை ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சருக்கு அனுப்புவது, மதுரையிலிருந்து டெல்லி சென்று பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம், சென்னையில் அனுமதி கிடைக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தென் மாவட்டங்களில் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணி நடத்தி மக்களிடம் ‘எய்ம்ஸ்’ விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.
Source